என் பயணங்களில் நான் சந்தித்த ஒரு நல்ல அனுபவத்தை பகிர்வது பொருத்தமாக இருக்குமென நம்புகிறேன்! சற்றே நீளமான பதிவிற்கு மன்னிக்கவும். ஒருமுறை பணி நிமித்தமாக இரயிலில் பயணம் செய்தபொழுது…, நான், எனக்கருகில் சென்னை சென்ட்ரலில் இருந்து பயணம் செய்த ஒரு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குடும்பம், என் நண்பர் (ஒரு ஆந்திர பிரதேச இளைஞர்), எங்கள் அருகில் மற்றொமொரு ஒடிசா இளைஞர் (சென்னையில் பணிபுரிபவர்) பயணம் செய்தோம். சில மணிநேர பயணங்களின் பின், பல்வேறு விசயங்களினூடே பஞ்சாபை சேர்ந்த குடும்ப தலைவர் எங்களிடம் கேட்டார். (நான் மற்றும் என் நண்பன்) அவர்: ஏன் நீங்கள் இந்தியை ஏற்றுக்கொள்வதில்லை? ஏதேனும் காரணம் உண்டா? என் நண்பர்: உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன்! சினிமா பார்க்கும் பழக்கம் உள்ளதா உங்களுக்கு? அ: பார்ப்போம். முக்கியமான பொழுதுபோக்கு சினிமாதான். ந: என்ன படம் கடைசியாக பார்த்தீர்கள்? அ: PK. எல்லோருக்கும் பிடித்த படம் அது. ந: கடைசியாக பார்த்த பஞ்சாப் மொழி படம் எது? அ: (சிறிது நேர யோசனைக்குப்பின்… ) நினைவில் இல்லை. உத்தேசமாக 3அல் 5வருடங்கள் இருக்கலாம். ந: ஏன் சமீபமாக பார்க்கவில்லை...